Header Ads

அவசரத்தால் அவதிப்படும் பெண்கள்

 



‘பெண்களிடம் நிதானம் குறைந்து, அவசரம் அதிகரித்து வருவதாக’ புதிய ஆய்வுகள் சொல்கின்றன. இன்று சமூகத்தில் நிலவும் பல்வேறு புதுவிதமான சூழ்நிலைகளால் எதையும் நிதானித்து முடிவு செய்யும் நிலையில் பெரும்பாலான பெண்கள் இல்லை. 

பல செயல்களை அவர்கள் ஒரே நேரத்தில் செய்யவேண்டியதிருப்பதால், அவசரம் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. வேலைகளை சீக்கிரம் முடிக்கவேண்டும் என்ற எண்ணம், அவசரத்தை உருவாக்கிவிடுகிறது. அவசரம், அந்த வேலையில் தெளிவற்ற நிலையை தோற்றுவிக்கிறது.

யாராக இருந்தாலும் அவசர அவசரமாக சிந்திக்கும்போது முடிவெடுக்கும் திறன் குறையும். முடிவெடுத்த பின்பும் தான் செய்தது சரிதானா? என்ற குழப்பம் மனதில் நீடித்துக்கொண்டே இருக்கும். அதனால் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கும் நிலை தோன்றும். பாதி செயல்கள் நடந்த பின்பு பின்வாங்கினால் அது பலவிதங்களில் நஷ்டத்தை உருவாக்கும். அவசரத்தில் பல விஷயங்களை கவனிக்க மறந்துவிடுவோம். அது இயல்பு. அவசரம் எதையும் ஆழ்ந்து கவனிக்கவோ, கிரகிக்கவோவிடாது.

அவசரக்காரர்களுக்கு, மற்றவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை காதுகொடுத்து கேட்ககூட நேரம் இருக்காது. தேவையற்ற ஒரு காரியத்தில் இறங்கிவிட்ட பின்பு, ‘அடடே கொஞ்சம் யோசித்திருக்கலாமே! மற்றவர்கள் சொன்னதை பரிசீலித்திருக்கலாமே!’ என்று நினைக்கத் தோன்றும். காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது.

தீர்மானிக்கும் திறன் இன்றைய வாழ்க்கைக்கு மிக அவசியம். இந்த திறன் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் தீர்மானம் என்பது அமைதியான மனநிலையில் எடுப்பது. அமைதியான மனநிலையில் மனம் நல்லவை கெட்டவைகளை சரியாக எடுத்துச் சொல்லும். லாபநஷ்டங் களைப் பற்றி சிந்திக்கும். சரி, தவறு எல்லாமே அமைதியாக சிந்திக்கும் போது மட்டுமே புலப்படும். அப்படி எடுக்கும் தீர்மானத்தில் தெளிவு இருக்கும். அவசரம், பதற்றத்தை உருவாக்கி தீர்மானிக்கும் திறனை குறைத்துவிடும்

No comments

Powered by Blogger.